செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கடமையான குளிப்பு

குளித்தல் கடமையான குளிப்பு 
248. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
249. 'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
250. ஃபரக்' என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'ஃபரக்' என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)
Volume :1 Book :5
251. 'நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் 'நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?' என்று கேட்டதற்கு, 'ஸாவு' போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என அபூ ஸலமா அறிவித்தார்.
Volume :1 Book :5
252. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, 'ஒரு ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு, 'உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது' என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
Volume :1 Book :5
253. நபி(ஸல்) அவர்களும் (அவர்களின் மனைவி) மைமூனா(ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"மற்றோர் அறிவிப்பில் ஒரு 'ஸாவு' அளவுள்ள பாத்திரம்" என்று கூறப்பட்டுள்ளது.
Volume :1 Book :5
254. 'நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்" என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
255. 'நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) மூன்று முறை தங்கள் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
256. 'உன் தந்தையின் சகோதரர் மகனான ஹஸன் இப்னு முஹம்மத் இப்னி அல்ஹனஃபிய்யா என்னிடம் கடமையான குளிப்பு எப்படி? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தங்களின் தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன். அப்போது 'நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?' என ஹஸன் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்' என்று கூறினேன்' என என்னிடம் ஜாபிர்(ரலி) கூறினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
Volume :1 Book :5
257. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கையையும் கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது மாறி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா (ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
258. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
259. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை" மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
260. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியபோது (முதலில்) தங்களின் மர்மஸ்தலத்தைத் தங்கள் கையினால் கழுவினார்கள். பின்னர், கையைச் சுவரில் தேய்த்துக் கழுவினார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்துத் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
261. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
262. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் கையைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
263. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் கடமையான குளிப்பைக் குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
264. 'நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியரில் ஒருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்புக் குளிப்பார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
Volume :1 Book :5
265. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
266. நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்துத் திரையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைத் தங்களின் கையில் ஊற்றி ஒரு முறையோ, இரண்டு முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய்க்கும் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும், தலையையும் கழுவினார்கள். தங்களின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அப்போது, 'வேண்டாம்' என்பது  போல் தங்களின் கையினால் சைகை செய்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
"இரண்டு முறை கை கழுவினார்கள் என்பதோடு மூன்றாவது முறை கழுவினார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்களா இல்லையா என எனக்குத் தெரியாது" என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுலைமான் கூறினார்.
Volume :1 Book :5
267. ("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.
268. நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ்(ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
Volume :1 Book :5
269. 'நான் அதிகமாக 'மதி' எனும் காம நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி அவர்களிடம் கேட்டு வருவதற்கு ஒருவரை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது, 'நீ உன்னுடைய உறுப்பைக் கழுவிவிட்டு உளூச் செய்து கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
270. '('நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்தி, காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கூறியபோது) 'நான் நபி(ஸல்) அவர்களுக்கு நறுமணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.
Volume :1 Book :5
271. 'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
272. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலை முடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
273. 'நபி(ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
274. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கையால் தண்ணீரைத் தங்களின் இடக்கையில் ஊற்றி இருமுறையோ, மும்முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய்க்கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையில் தண்ணீர் ஊற்றி உடம்பைக் கழுவினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள் நான் அவர்களிடம் துவாலையை; கொடுத்தேன். அவர்கள் அதை விரும்பாமல் தங்களின் கைகளால் தண்ணீரை வழித்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
275. 'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்தால் எங்களைப் பார்த்து 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்" என அபூ ஹுiரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
276. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து ஓர் ஆடையால் திரையிட்டேன். அவர்கள் தண்ணீரைத் தங்களின் கைகளில் ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்லத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் குழுவினார்கள். வாய்க் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையிலும் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அதை வாங்கவில்லை. தங்களின் கைகளால் தண்ணீரை வழித்துவிட்டுச் சென்றார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
277. 'எங்களில் எவருக்குக் குளிப்புக் கடமையானாலும் மூன்று முறை இரண்டு கைகளால் தண்ணீர் எடுத்துத் தலையின் மீது ஊற்றுவோம். பின்னர், கையால் தண்ணீரை அள்ளி வலப்பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் எடுத்து இடப்பக்கம் ஊற்றுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
278. இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா(அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா(அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா(அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!' என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை' என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :1 Book :5
279. 'அய்யூப்(அலை) அவர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. அதை அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடையில் எடுத்தார்கள். உடனே அவர்களின் இரட்சகன் அவர்களை அழைத்து 'அய்யூபே! நீர் பார்க்கிற இதைவிட்டு உம்மை தேவையற்றவராக நான் ஆக்கவில்லையா?' எனக் கேட்டான். அதற்கு 'உன் கண்ணியத்தின் மீது ஆணையாக அப்படித்தான்; எனினும் உன்னுடைய பரகத்தைவிட்டு நான் தேவையற்றவனாக இல்லை' என அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்" என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
280. 'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) (என்னைச் சுட்டிக்காட்டி) 'இது யார்?' என்று கேட்டார்கள். நான் உம்மு ஹானி என்றேன்" என உம்முஹானி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
281. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் வலக் கரத்தால் தங்களின் இடக்கையில் ஊற்றினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தையும் அவர்கள் மேனியில் பட்டதையும் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரின் மீதோ, பூமியிலோ தேய்த்தார்கள். பின்னர், தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். இரண்டு கால்களையும் கழுவவில்லை. பிறகு அவர்கள் தங்களின் உடம்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு பாதங்களையும் கழுவினார்கள்" மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
282. 'அபூ தல்ஹாவின் மனைவி உம்மு ஸுலைம் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'தண்ணீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உம்மு ஸலமா(ரலி) கூறினார்.
Volume :1 Book :5
283. 'நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?' என்று கேட்டதற்கு, 'குளிப்புக் கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்' என்றேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
284. 'நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
Volume :1 Book :5
285. 'நான் குளிப்புக் கடமையாகியிருந்த இருந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் சந்தித்து என்னுடைய கையைப் பிடித்தார்கள். நான் அவர்களோடு நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் நழுவிச் சென்று கூடாரத்தில் போய்க் குளித்துவிட்டு வந்தேன். அப்போது நபி(ஸல்) உட்கார்ந்திருந்தார்கள். 'அபூ ஹுர்ரே! எங்கே சென்று விட்டீர்?' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு நடந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! அபூ ஹுர்ரே! நிச்சயமாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாவதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
286. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு 'ஆம்! (தூங்கும் முன்) உளூச் செய்து கொள்வார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என அபூ ஸலமா அறிவித்தார்.
Volume :1 Book :5
287. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஓரே பாத்திரத்தில் ஆணும், பெண்ணும் ஜனாபத்துக் குளியல்1 குளிப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 161

நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்-எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஒரு பாத்திரத்திலிருந்து குளிக்கக் கூடியவர்களாக இருந்தோம். எனக்காக கொஞ்சம் தண்ணீரை விட்டு வையுங்கள் எனக்காக கொஞ்சம் விட்டு (தண்ணீரை) வையுங்கள் என நான் கூறுகின்ற வரை அவர்கள் என்னை முந்திக் கொள்வார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக மூஆதா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். அவ்விருவரும் ஜுனுபாளியாக இருந்தனர் எனவும் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : மூஆதா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு: 1. ஆண்பெண் தாம்பத்ய உறவு (அல்லது) கனவில்-அம்மாதிரி ஏற்பட்டதாக காணும் நிலையில்-விந்து வெளிப்பட்டால், அந்நிலையை ஜனாபத்து என்று மார்க்கத்தில் கூறப்படுகிறது. அந்நிலையிலிருப்பவருக்கு ஜுனுபாளி எனவும் குறிப்பிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க.

ஜுனுபாளி உறங்கவோ, உண்ணவோ விரும்பினால் ஒளு செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 162

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுனுபாளியாக இருக்க, அவர்கள் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் தொழுகைக்கு ஒளு செய்வது போன்று ஒளு செய்து கொள்வார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

குளிப்பதற்கு முன்பு ஜுனுபாளி தூங்குவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 163

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ‘வித்ரு‘ (தொழுகை) பற்றி, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் (அறிவிப்பாளர்) கேட்டேன். (என்ற ஹதீஸை அவர் கூறுகிறார். அந்த தொடரில்) ஜனாபத்தின் போது எவ்வாறு அவர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் உறங்குமுன் குளிக்கக்கூடியவர்களாக இருந்தார்களா? அல்லது குளிக்குமுன் உறங்குவார்களா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் அவைகளை (இரண்டு விதமாக) செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது சில சமயம் குளித்துவிட்டு தூங்குவார்கள். சில சமயம் ஒளு செய்து விட்டு தூங்குவார்கள் எனக்கூறினார்கள். (இக்)காரியத்தில் விஸ்தீரணத்தை ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக! எனக்கூறினேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீகைஸ் ரளியல்லாஹு அன்ஹு

தன் மனைவியுடன் உடலுறவு கொண்ட கணவன் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் அவர் ஒளுசெய்து கொள்ளவும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 164

“உங்களில் யாரேனும் தன் மனைவியிடம் தாம்பத்ய உறவை (உடலுறவை) முடித்துக் கொண்டு மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் ஒளு செய்து கொள்ளவும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு

தயம்மும் செய்வது, அதுபற்றி அல்லாஹ்வின் உத்தரவு வந்தது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 165

சில பயணங்களில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் புறப்பட்டோம். ‘பைதாஉ‘ அல்லது தாத்துல்ஜைஷ் (கைபருக்கும் மதீனாவிற்கும் இடையில் உள்ள இடம்) என்னும் இடத்தை நாங்கள் அடைகின்ற வரை அதாவது இதற்கிடையில் என்னுடைய கழுத்தில் கிடந்த மாலை ஒன்று அருந்து விழுந்து விட்டது. அதை தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே தங்கிவிட்டனர். கூட வந்த மக்களும் அவர்களுடன் தங்கிவிட்டனர். அவர்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் கிடையாது, அவர்கள் கைவசமும் தண்ணீர் இல்லை. அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மக்கள் வந்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் என்ன செய்து விட்டார்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களோடு இருக்கும் மக்களையும் அவர்களுக்கு தண்ணீர் இல்லாத இடத்தில், அவர்களிடமும் தண்ணீர் இல்லாத நிலையில் தங்க வைத்துவிட்டனர் என்றனர். இதைக்கேட்ட அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தொடையின் மீது தன் தலையை வைத்து நன்றாக உறங்கி கொண்டிருந்த சமயம் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், மக்களையும் தடுத்து நிறுத்தி விட்டாய், அவர்களுக்கு அங்கு தண்ணீர் கிடையாது, அவர்கள் வசமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். என்னை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிந்த்தித்துவிட்டு அவர்கள் எதைக்கூற வேண்டுமென அல்லாஹ் நாடினானே, அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பில் தங்களது கையைக் கொண்டு குத்தவும் ஆரம்பித்தனர். அச்சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸ்தானம் (அவர்கள் தலை) என் மடி மீது இருந்ததே தவிர என்னை அசைவதிலிருந்து தடுக்கவில்லை. தண்ணீர் இல்லாத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், காலைப் பொழுதை அடையும் வரை உறங்கி விட்டனர். அந்நேரத்தில் தான், அல்லாஹ் ‘தயம்மும்‘ வசனத்தை இறக்கி வைத்தான். அதன்பிறகு அவர்கள் எல்லோரும் தயமும் செய்து கொண்டனர்.

அபூபக்கரின் குடும்பத்தவர்களே! உங்களுடைய பாத்திரத்தில் இச்சம்பவம் முதலாவதல்ல என உஸைது பின் அல்ஹுலைர் கூறுகிறார். (இவர், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு மார்கத்தைக் கற்று தரவும், அவர்கள் மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுத்தரவும், அவர்களை நல்வழி நடத்திச் செல்லவும், ஒரு சிலரை ‘மினாவின்‘ இரவில் தேர்ந்தெடுத்து நியமித்தார்களே! அவர்களில் இருவரும் ஒருவராவார்)

நான் எந்த ஒட்டகத்தின் மிது அமர்ந்து (சவாரி) செய்து இருந்தேனோ அதை கிளப்பினோம். அதற்கு கீழேயே தொலைந்து போன என் மாலையை பெற்றுக்கொண்டோம்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

ஜுனுபாளி ‘தயம்மும்‘ செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 166

(அறிவிப்பாளராகிய) நான் அப்துல்லா, அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு ஆகியவர்களுடன் அமர்ந்தவனாக இருந்தேன். (அப்போது அபூமூஸா அப்துல்லாஹ்விடம்) “அபூஅப்துர்ரஹ்மானே! ஓரு மனிதர் ஜுனுபாளியாகி விடுகிறார்; ஒரு மாதம் வரை தண்ணீர் அவருக்கு கிடைக்கவில்லை, தொழுகையை அவர் எவ்வாறு செய்(நிறைவேற்று)வார்? என அபூமூஸா கேட்டார்.

ஒரு மாதம் வரை தண்ணீரை அவர் பெற(அவருக்கு கிடைக்கா)விட்டாலும் தயம்மும் செய்யவே மாட்டார் என அப்துல்லாஹ் கூறினார். “நீங்கள் தண்ணீரைப் பெறாத (தண்ணீர் உங்களுக்கு கிடைக்காத) போது சுத்தமான மண்ணீல் தயம்மும் செய்து கொள்ளுங்கள்” என்ற அல்மாயிதா அத்தியாயத்திலுள்ள இந்த வசனத்தை என்ன செய்வீர் என அபூமூஸா கேட்டார். (அதற்கு) அப்துல்லாஹ், “இந்த வசனத்தில் உள்ளவாறு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் தண்ணீர் குளிர்ந்து விட்டால் (கூட) மண்ணை(க் கொண்டு தயம்மும் செய்ய) அவர்கள் ஆரம்பித்து விடுவர்” எனக்கூறினார்.

அபூமூஸர் “என்னை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியிருந்தார்கள். நான் ஜுனுபாளியாகிவிட்டேன். (தண்ணீர் என்னிடம் இல்லை தேடியும்) தண்ணீரை நான் பெறவில்லை. (எனக்கு கிடைக்கவில்லை அந்நிலையில்) கால்நடை மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். அதன்பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்து அச்சம்பவத்தை அவர்களுக்குக் கூறினேன். உன் கைகளால் இவ்வாறு செய்தாலே போதும் எனக்கூறினார்கள். (அதை செயல் ரூபத்தில் காட்டுவதற்காக) அவர்களின் இருகைகளையும் ஒருமுறை பூமியில் அடித்துவிட்டு, அதன்பின் இடதுகையை வலது கையிலும் தங்களது முன்கையையின் மேல் பகுதியின் மீதும், தங்களது முகத்தின் மீதும் தடவிக்கொண்டனர் என்ற அம்மாரின் கூற்றை நீர் செவியுறவில்லையா? என அப்துல்லாவிடம் கூறினார். அதற்கு அப்துல்லாஹ்; “உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மார் ரளியல்லாஹு அன்ஹு கூற்றை போதுமாக்கிக் கொள்ளவில்லை என்பதை நீர் பார்க்கவில்லையா?” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : ஜுனுபாளியின் தயம்மும் செல்லாது என அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் கருதிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அம்மாரின் கூற்றை மாத்திரம் ஆதாரமாக ஏற்க உமர் ரளியல்லாஹு அன்ஹு தயாராக இல்லாதிருந்தார்கள். அதன் பிறகு மற்ற ஏனைய ஸஹாபாக்களும் அவர்களை பின்பற்றியவர்களுக்கும் மத்தியில் பல ஹதீஸ்களின் தெளிவில் ஜுனுபாளியின் ‘தயம்மும்‘ செல்லுபடியாகும் என்பது தெளிவானவுடன் உமர் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் ஜுனுபாளிக்கு ‘தயம்மும்‘ ஆகும் என்ற கூற்றிற்கு திரும்பி அதை அங்கீகரித்துக் கொள்கின்றனர்.

ஸலாமிற்கு பதில் கூறுவதற்காக ‘தயம்மும்‘ செய்து கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண்: 167

நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் (மூலம்) உரிமை எழுதப்பட்ட அப்துர்ரஹ்மான் பின் யாசரும் அபூஜஹ்ம்பின் அல்ஹாரிஸ் அவர்களை முன்னோக்கி வந்து முடிவாக அவரிடத்தில் நுழைந்தோம். அப்போது அபூஜஹ்ம் ரளியல்லாஹு அன்ஹு “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகக் கிணற்றுப்பகுதியிலிருந்து முன்னோக்கி வந்தார்கள் (அப்போது) ஒரு ஆடவர் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவற்றின் பால் வந்தடைந்து, தங்களது முகத்தையும். தங்களது இருகைகளையும், தடவிக்கொண்டு அதன் பிறகு (ஸலாம் கூறியவருக்கு) பதில் ஸலாம் கூறினார்கள் எனக் கூறினார்.

அறிவிப்பவர்: உமைர் மௌலா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா.

விசுவாசி அசுத்தமாக மாட்டார் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 168

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயமாக - மதினாவின் தெருக்களில் ஒரு தெருவில் ஜுனுபாளியாக இருந்தநிலையில் - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்துவிட்டு ஒளிந்து அங்கிருந்து சென்று குளித்துவிட்டனர். (இதற்கிடையில்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரைத் தேடினார்கள். அவர் (திரும்ப) வந்த பொழுது “அபூஹுரைராவே எங்கிருந்தீர்?” எனக்கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் ஜுனுபாளியாக இருக்க என்னை நீங்கள் சந்தித்தீர்கள். ஆகவே நான் குளித்து முடிக்கும் வரை உங்களோடு உட்காருவதை வெறுத்தேன்” என்றார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். “ஸுப்ஹானல்லாஹ் நிச்சயமாக விசுவாசி1 அசுத்தமாக மாட்டான்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு.

குறிப்பு : 1. ஜுனுபாளி, பிறரைத் தொடுவதும், பிறரோடு பேசுவதும் மார்க்கரீதியாக கூடும். அந்நிலையில் யாரோடும் கைகொடுக்கக்கூடாது, தீண்டக்கூடாது என்றோ, அல்லது பேசக்கூடாது என்றோ, அல்லது அந்நிலையுடையோர் அசுத்தப்பட்டவர் என்று கருதுவதோ இஸ்லாத்தில் இல்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முஃமீனானவர் உயிரோடிருக்கும் போதும், உயிர்பிரிந்த பின்பும், அசுத்தமாகி விடமாட்டார் என்ற ஹதீஸ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்க புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது ஸஹீஹில் பதிவு செய்திருக்கிறார்கள்.

கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ்வை எல்லா நேரத்திலும் நினைவு கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 169

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை, அவர்களது எல்லா நேரங்களிலும் நினைவு கூறக்கூடியவர்களாக இருந்தனர்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

மலஜலம் கழித்தபின்பு ஒருவர் ஒளு செய்யாமல் (உணவு) உண்ணுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 170

மலஜலம் கழித்துவிட்டு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. (அப்பொழுது) ஒளுவைப்பற்றி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, அருகில் இருந்தவர்கள்) நினைவூட்டினார்கள். “நான் தொழுது கொள்ளவா விரும்புகிறேன்? ஒளுச் செய்து கொள்ள...‘‘ எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

ஹைளு (மாதவிடாய்) பற்றிய நூல்

மஹுழ் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள் என்ற அல்லாஹ்வின் கூற்று பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 171

“யூதர்கள் தங்களின் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களுக்கு தங்களுடன் உணவு உண்ணவோ தங்களது வீடுகளில் கலந்து (தங்களோடு) சேர்ந்து குடியிருக்கவோ விடமாட்டார்கள். (வீட்டுக்கு வெளியில் தனிமையில் ஆக்கிவிடுவார்கள்). ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி கேட்க, மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள், அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள். ஆகவே, மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள் என்ற வசனத்தை அதன் கடைசிவரை-கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய-அல்லாஹ் இறக்கி வைத்தான். (இவ்வசனத்தில் கூறப்பட்ட நிலையை தெளிவு செய்யும் நிமித்தம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாதவிடாய் பெண்களோடு தாம்பத்திய உறவு நீங்கலாக எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக்கூறினார்கள். இக்கூற்று யூதர்களுக்கு எட்டியது (அதற்கவர்கள்) நம் காரியத்தில் நமக்கு மாற்றம் செய்வதை தவிர, அவர் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை எனக்கூறினர். உஸைத்பின் அல்ஹுளைரும், அப்பாது பின் பிஷ்ரும் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ? என நாங்கள் எண்ணும் வரை அவர்களின் முகம் மாறியது (அதை உணர்ந்த) அவ்விருவரும் வெளியேறிவிட்டனர். (ஆயினும்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பால் அவ்விருவரையும் வரவேற்றது. அவ்விருவரையும் அழைத்து வரச்சொல்லி ஆள்  அனுப்பி (அவர்கள் வந்தவுடன்) அவ்விருவருக்கும் பாலை குடிக்க கொடுத்தனர்.  இதன்மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இருவர் மீதும் கோபப்படவில்லை என்பதை அவ்விருவரும் தெரிந்து கொண்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : பருவமடைந்த பெண்ணிற்கு மாதத்தில் ஒரு முறை குறிப்பிட்ட நாள்களில் கருப்பையிலிருந்து மர்ம உறுப்பு வழியாக வெளிப்படும் இரத்தத்திற்கு ‘ஹைளு‘ என்று கூறப்படுகிறது.

இது வரும் நாட்களை அறிந்து அந்த நாட்களில் பெண்கள் ‘தொழுகை‘, ‘நோன்பை‘ விட்டு விடுவது கட்டாயக் கடமை என்பதாலும், அதிலிருந்து விடுபட்டு சுத்தமானபின் அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளை நிறைவேற்றுவது கடமையில்லை என்பதையும், அந்நாட்களில் விடுபட்ட நோன்பை மீண்டும் வைக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அது பற்றிய சட்டங்களை தெரிந்து செயல்பட வேண்டும் என்பதே ‘அல்லாஹ்வின் கட்டளையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையுமாகும். எனவே இது பற்றி எழுதுபவர் கூச்சப்படுவதோ, சம்மந்தப்பட்டவர்கள் படித்து தெளிவு பெற கூச்சப்படுவதோ மார்க்கத்திற்கு முரண்பட்டதாகும். ஆகவே, இத் தொடரில் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சந்தர்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மாதவிலக்கு வரும் நேரம் பெண்குலத்திற்கு மிக சங்கடமானநேரம் பலஹீனத்தின் உச்சத்தையும் மனதில் ஒரு விதமான வெறுப்பையும் பெண்கள் அனுபவிக்கும் நேரம். ஆகவே ஆடவர்கள் தங்களை அடக்கிக் கொண்டு தாம்பத்திய உறவிலிருந்து நீங்கிக் கொள்வதும் அவசியம் அந்த குறிப்பிட்ட நாட்களைத் தவிர்த்து விட்டு மற்ற ஏனைய நாட்களில் தாம்பத்திய உறவை மேற் கொள்ளலாம். எனவே குறிப்பிட்ட அந்நாட்களில் அச்செயலை கண்டிப்பாகக் தவிர்க்கவும். இதுவே குர்ஆனின் கட்டளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுமாகும்.

பெண்கள் மாதவிலக்கு நின்றபின்பும் தாம்பத்ய உறவிற்கு பின்பும் குளிக்கும் முறை பற்றி விளக்கும் பாடம்.

ஹதீஸ் எண் : 173

மாதவிலக்கு முடிந்த பின் குளிக்கும் முறை பற்றி அஸ்மாஉ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டனர் (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) “உங்களில் ஒருத்தி குளிப்பதற்காக தண்ணீரையும், இலந்தை இலையையும் (அசுத்தத்தை நீக்க உபயோகப்படுத்தப்படும் சாதனங்களையும்) எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மிக நன்றாக(க்கழுவி) சுத்தமாக்கிக் கொண்டு அதன் பிறகு தலையின் மீது தண்ணீரை அவள் ஊற்றி மயிர்க்காம்புகள் வரை தண்ணீர் சேரும் அளவிற்கு நன்றாக கடுமையாகத் தேய்க்க வேண்டும். பிறகு அதன்மீது (தலைமீது) தண்ணீரை ஊற்றவேண்டும். அதன்பிறகு பஞ்சு அல்லது துணி அல்லது அதற்கு உரிய சாதனம் ஏதாவது ஒன்றில் நறுமனம் கலந்து அதன்மூலம் அவள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்” என்றார்கள். அதை வைத்து நான் எவ்வாறு சுத்தம் செய்யவேண்டும் என அவர்கள் (அஸ்மாஉ ரளியல்லாஹஷு அன்ஹா) கேட்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸுப்ஹானல்லாஹ்! அதன்மூலம் நீ சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றனர். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அப்பெண்ணுக்கு கேட்கும் அளவிற்கு இலேசான சப்தத்தில் “அதாவது இரத்தம் வந்த இடத்தை அதன்மூலம் சுத்தம் செய்து கொள்” எனக்கூறினர். (அடுத்து) தாம்பத்ய உறவிற்குப் பிறகுள்ள குளிப்பு முறை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அப்பெண்மனி (அஸமாஉ) கேட்டனர். (அதற்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீரை எடுத்து (கழுவி) அவள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அழகாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அல்லது சுத்தத்தை எத்தி  வைக்க வேண்டும். அதன்பிறகு அவளது தலையின் மீது தண்ணீர் ஊற்றி மயிர்காம்புகள் (நனையும்) வரை தண்ணீரைச் சேர்த்து வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். பிறகு அதன் (தலையின்) மீது தண்ணீரை அவள் ஊற்ற வேண்டும் எனக்கூறினர்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே நல்லவர்கள். அவர்கள் மார்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களை தடுக்கவில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

தொழும் முஸல்லாவையோ, புடவையையோ, மாதவிடாய் வந்த நிலையிலிருக்கும் பெண் எடுக்க அனுமதியுண்டு என்பது பற்றி பாடம்.

ஹதீஸ் எண் : 172

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்து கொடு என்று கூறியதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன் எனக்கூற (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை எனக்கூறினர். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

மாதவிடாய்ப் பெண்கள் ஆடவரின் தலையை வாரி அதை கழுவிவிடுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 174

(ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இஃதிகாபிலிருக்கும் சமயம்) நோயாளி அங்கிருக்க அவரைப் பற்றி கேட்(விசாரிக்)காமல் நான் நடந்தவளாக அன்றி தேவைக்காக வீட்டினுள் நான் நுழைகிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களது தலையை (அவர்கள் பள்ளியிலிருந்தவாறு) என்பால் நுழைப்பர். நான் (மாதவிடாயுடையவளாக இருக்க) அவர்களது தலையை நான் வாரிவிடுவேன். (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்களானால் தேவையின்றி வீட்டிற்குள் நுழையமாட்டார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்.

மாதவிடாய் வந்த பெண்ணின் மடியில் சாய்ந்து கொள்வதும் (திருமறையை) ஓதுவதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 175

நான் மாதவிடாய் வந்தவளாக இருக்கும் நிலையில் என் மடிமீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்தவாறு திருகுர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

ஓரே போர்வையில் மாதவிடாய் வந்த பெண்ணுடன் உறங்குவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 176

ஒரு சமயம் நான் (உம்முசல்மா ரளியல்லாஹு அன்ஹா) அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் ஓரே போர்வையினுள் படுத்திருந்தேன். அது சமயம் எனக்கு மாதவிலக்கு ஏற்ப்பட்டு விட்டது. மெதுவாக அங்கிருந்து சென்று (எழுந்து) மாதவிடாய் வரும் காலத்தில் உடுத்தும் உடையை எடுத்து (அணிந்து) கொண்டேன். (அப்போது) என்னைப்பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “மாதவிடாய் வந்து விட்டதா” என்றனர். நான் “ஆம்” என்றேன். “என்னை அழைத்தார்கள் அந்த போர்வையில் அவர்களுடன் நானும் படுத்துக் கொண்டேன்” எனக்கூறினார்கள்.

மேலும் அவர்களும் அல்லாஹ்வின் தூதர் அவர்களும் ஒரே பாத்திரத்தில் தாம்பத்ய உறவிற்குப் பிறகு குளித்தாகவும் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு: இரண்டு சம்பவம் வெவ்வேறு நாட்களில் நடந்தது என்பதை கருத்தில் கொள்க.

உள்ளாடைக்கு மேல் மாதவிலக்கு வந்த பெண்ணை கட்டித்தழுவது பற்றிய படாம்.

ஹதீஸ் எண் : 177

எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அது ஏற்பட்டதுமே உள்ளாடை அணிந்து கொள்ளுமாறு அப்பெண்ணிற்கு கட்டளையிடுவார்கள். பிறகு அப்பெண்ணை கட்டியணைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இச்சையை அடக்கிக் கொண்டது போல் உங்களில் எவர் தனது இச்சையை அடக்கும் ஆற்றல் உடையவராக இருக்கிறார்?

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு: கட்டியனைக்கும் போது தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் அப்பெண்ணிருக்கும் நிலையில் உடல் சேர்க்கை செய்து விடக்கூடாது என்பதே இதன் கருத்து. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விலக்கப்பட்ட அந்நிலையிலிருந்து தங்களை காத்துக் கொள்கின்ற சக்தியுடையவர்களாக இருந்தனர். ஆகவே (தாம்பத்திய உறவை) அச்செயலை கண்டிப்பாகக் தவிர்க்க வேண்டும் என்பது தெளிவு

ஓரே பாத்திரத்தில் மாதவிடாய் வந்த பெண்ணோடு பருகுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 178

நான் மாதவிடாய் வந்த நிலையில் (ஒரு பாத்திரத்தில்) பருகிவிட்டு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்பாத்திரத்தைக் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்தேனா அதே இடத்தில் தங்களது வாயை வைத்து குடிப்பார்கள். எலும்புடன் ஒட்டியிருக்கும் இறைச்சியை நான் கடித்துவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்திருந்தேனோ அங்கேயே வாயை வைப்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

முஸ்தஹாளா (பெரும்போக்கு) உள்ள பெண் பற்றியும் அவளது தொழுகை பற்றியும் உள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 179

“அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் உம்முஹபீபா பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மார்க்கத்தீர்ப்பு கேட்டனர். நான் (வழக்கமான நாட்களைவிட) அதிக நாட்கள் மாதப்போக்கு வருபவளாக உள்ளேன் எனக்கூற, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; அது ஒரு நரம்பிலிருந்து புறப்பட்டுவரும் இரத்தமாகும். ஆகவே நீ குளித்து விட்டு தொழுது கொள்” எனக்கூறினர். (எனவே) ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் (உம்முஹபீபா ரளியல்லாஹு அன்ஹா) குளித்துக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முஹபீபாவை ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொள்ள வேண்டுமென கட்டளையிட்டார்கள்” என்பதை இப்னு ஷிஹாப் கூறவில்லை. ஆயினும் (அது) உம்முஹபீபாவே செய்து கொண்ட ஒரு காரியமாகும் என லைத் பின் ஸஅது கூறுகிறார்கள்.

குறிப்பு: பெரும்போக்கு இருந்து வரும் ஒரு பெண்ணோடு தாம்பத்திய உறவு கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்பதை கவனத்தில் கொள்க.

மாதவிடாய் பெண் விடுபட்ட தொழுகையை திருப்பித் தொழு மாட்டாள். நோன்பை திரும்ப நோற்க வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 180

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் (அறிவிப்பாளர்) மாதவிடாய் வந்தபெண் நோன்பை திரும்பி நோற்கிறாள், தொழுகையை திருப்பித் தொழுவதில்லையே! அது என்ன? எனக்கேட்டேன், (அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நீ ஹரூரிய்யா1வைச் சார்ந்தவளா? எனக்கேட்டனர். நான் ஹரூரிய்யாவைச் சார்ந்தவளல்ல. ஆயினும் நான் (தெளிவுபெற) கேட்கிறேன், என்றேன். (அதற்கு) ‘மாதவிடாய் எங்களுக்கு ஏற்படும்போது (விட்ட) நோன்பை திருப்பி நோற்கவேண்டுமென நாங்கள் கட்டளையிடப்பட்டோம். தொழுகையை திருப்பித் தொழவேண்டுமென நாங்கள் கட்டளையிடப்படவில்லை‘ எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆதா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு: 1 மாதவிடாயிலிருந்து சுத்தமான பிறகு, அக்காலகட்டத்தில் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமென கட்டயமாக்கி வந்த சுவாரிஜ்களில் ஒரு கூட்டத்தவருக்குப் பெயர்தான் ஹரூரிய்யா எனப்படும்.
கடமையான குளிப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக